ராமநாதபுரம் : "ராமநாதபுரம் நகராட்சி வசந்தநகரில் ரோட்டை காணவில்லை ,'என, நகராட்சி கமிஷனிரிடம் பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். நகராட்சி 12வது வார்டில் உள்ள வசந்தநகரில் அடிப்படை வசதிகள் என்பது கேள்வி குறியே.இந்த பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் ஐந்தாவது தெருவில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள 20 அடி ரோட்டை காணவில்லை என புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளனர். குண்டும் குழியுமாக ரோடு இருந்தாலும் பராவயில்லை ,ரோடே இல்லாமல் கழிவுநீர் தெப்பத்திற்குள் இறங்கி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.இது தொடர்பாக இப்பகுதியினரின் புலம்பல்: மணிமேகலை: இங்குள்ள 20 அடி ரோடு ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய்விட்டது. நகராட்சியில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நகராட்சி முழுவதும் புதிய ரோடு போடும்போது எங்கள் பகுதியில் உள்ள ரோட்டைகண்டு பிடிக்க கூட முயற்சிக்கவில்லை . ரோடு இல்லாமல் தனியார் பிளாட் வழியாக குளத்திற்குள் இறங்கி செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். விஜயா: கழிவுநீர் கால்வாய் இல்லாமல் ,வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ஏற்கனவே பெய்த மழைநீருடன் தெப்பமாக தேங்கி நிற்கிறது. இதில் இறங்கிதான் நடந்து செல்ல வேண்டிய அவலநிலையில் உள்ளோம். இங்குள்ள கவுன்சிலரிடம் கூறினால் அடுத்த முறை பார்ப்போம் என பொறுப்பின்றி கூறுகிறார். தினமும் நகராட்சி அலுவலகத்திற்கு ஒவ்வொரு வீட்டில் இருந்தும் இரண்டுபேர் வீதம் புகார் கொடுக்க சென்றும் தீர்வு இல்லை. சரவணன்: இப்பகுதியில் குப்பைகளையும் கொட்டி விடுவதால் தேங்கிய கழிவுநீர் குளத்திலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோயை பரப்புகிறது. ரோடு இல்லாத காரணத்தால் குடிநீர் லாரிகூட வருவதில்லை. பாலசுப்பிரமணியன்: வீட்டிற்கு 40 ரூபாய் வசூல் செய்து கழிவுநீரை அப்புறப்படுத்தினாலும் மீண்டும் தேங்கிவிடுகிறது. ஊரணிக்கு செல்லும் தண்ணீரையும் தனியார் சிலர் தடுத்துள்ளனர். இதையெல்லாம் நகராட்சி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. நகராட்சி கமிஷனர் முஜ்புர்ரஹ்மான் கூறும்போது, ""இது குறித்த தகவல் எனக்கு வர வில்லை. அந்தபகுதியில் ஆய்வு மேற்கொண்டு ரோட்டின் ஆக்கிரமிப்புகள் அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்,'' என்றார்.
0 comments:
Post a Comment