ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பள்ளி செல்லும் வயதில் பிச்சையெடுக்கும் சிறுவர்களின் பரிதாப செயலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமேஸ்வரத்தில் பிச்சையெடுப்பதை தொழிலாக கொண்டவர்கள் ஏராளம். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 200 முதல் 400 ரூபாய் வரை கிடைப்பதாலும், யாத்ரீகர்கள் தரும் துணி, உணவுக்காக பிச்சையெடுத்து சம்பாதிக்கின்றனர். வருமானம் அதிகளவில் வருவதால் வெளியூர்களில் இருந்து வந்து இங்கு முகாமிட்டுள்ள இவர்கள், ராமேஸ்வரம் கோயில், அக்னிதீர்த்த கடற்கரை, கெந்தமாதன பர்வதம் பகுதியில் பிச்சையெடுப்பதை தொழிலாக செய்கின்றனர். இதில் உள்ளூர் கும்பலை சேர்ந்தவர்களும், வெளியூர் பிச்சைக்காரர்களுக்கு போட்டியாக பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர். இதன் வருவாயில் ஒரு பகுதியை குடிப்பதற்கும், மீதியை ஊரிலுள்ள தங்களது குடும்பத்திற்கு அனுப்பி வரும் இவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.பள்ளிசெல்லும் வயதுடைய சிறுவர்களையும் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துவதும் அதிகரித்துள்ளது. பெற்றவர்களே பணத்துக்காக பிள்ளைகளை இச்செயலில் ஈடுபடுத்துகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நூற்றுக்கும் குறைவாக இருந்த பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை இன்று 500ஐ தாண்டிவிட்டது. இரண்டு ஆண்டுக்கு முன் சிறுவர்களை பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இச்செயல் தவிர்க்கப்பட்டது. ஆனால் தற்போது பள்ளிசெல்லும் வயதுடைய சிறுவர்கள் பிச்சையெடுப்பதை அதிகாரிகளே வேடிக்கை பார்த்து செல்லும் அவல நிலை தொடர்கிறது. ரோட்டின் ஓரங்களில் அமர்ந்துள்ள இவர்கள் கிடைத்ததை உண்டு அங்கேயே படுத்து தங்களது வாழ்க்கையை கழித்தாலும், இவர்களின் வருவாய்க்கு மட்டும் குறைவில்லை. மன நலம் பாதிக்கப்பட்டு ரோடுகளில் திரியும் ஆதரவற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பிச்சைக்காரர்கள் போர்வையில் வருவாய் ஈட்டிவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, சிறுவர்களை பிச்சையெடுக்கும் செயலில் ஈடுபடுத்துபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு முன்வரவேண்டும்.
செய்தி : தினமலர்.
0 comments:
Post a Comment