Monday, 25 April 2011

3 மாத்தில் ரூ.7 லட்சம் அபராதம் : சிபிசக்ரவர்த்தி ஏ.எஸ்.பி.,அதிரடி


ராமநாதபுரம் : ராமநாதபுரம் டவுனில் மட்டும் சிபிசக்ரவர்த்தி ஏ.எஸ்.பி.,அதிரடி நடவடிக்கையால் , மூன்று மாதங்களில் வாகனம் தொடர்பான 2 ஆயிரத்து 677 வழக்குகள் பதியப்பட்டு, ஏழு லட்சத்து 11 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் பஜார் ஸ்டேஷனில் பொறுப்பேற்ற சிபிசக்ரவர்த்தி ஏ.எஸ்.பி., தினமும் ஏதாவது ஒரு பகுதியில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்கிறார். ராமநாதபுரம் பகுதியில் போக்குவரத்து தொடர்பாக வாடகை வாகன டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், சொந்த வாகனத்தை வாடகைக்கு ஓட்டுபவர்கள் என அனைவரையும் அழைத்து பேசி,"" சட்டத்திற்கு புறம்பாக யாரும் செயல்பட கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எச்சரித்து அனுப்பினார். இதன்பின் நடந்த அதிரடி சோதனையில் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டியது, லைசென்ஸ் இல்லாதது, அதிகபாரம், சொந்த வாகனத்தை வாடகைக்கு ஓட்டியது, சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றியது என, பல தரப்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளார்.இதன் மூலம் கடந்த ஜனவரியில் 379 வழக்குகளில் 99 ஆயிரத்து 500 , பிப்ரவரியில் 905 வழக்குகளில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 700 ,மார்ச்சில் ஆயிரத்து 393 வழக்குகளில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 150 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ல் மோட்டார் தொடர்பான வழக்குகளில் ஏழு லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்துள்ளநிலையில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 7 லட்சத்து 11 ஆயிரத்து 300 ரூபாய் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ராமநாதபுரம் நகரில் மதுபான கடைகளில் நடக்கும் சில்லரை விற்பனை, அத்துமீறல், லாட்ஜ்களில் சூதாட்ட கிளப் நடத்துதல் போன்றவைகள் குறித்தும் அதிரடியாக ரெய்டு நடத்தி ஆங்காகே பல இன்பார்மர்களை நியமித்து, அவர்களிடம் மொபைல் எண்ணை கொடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருவதால், தற்போது டவுன் பகுதியில் ஒரளவு அத்துமீறல் குறைந்து வருகிறது. இவர் விடுப்பில் செல்லும்போது ஆங்காங்கே மீண்டும் அத்துமீறல் தலைதூக்குவது தெரிந்து, மீண்டும் மதுபான பார் உரிமையாளர்களை அழைத்து எச்சரித்துவருகிறார். ஏ.எஸ்.பி.,யின் நடவடிக்கைக்கு அனில்குமார் கிரி எஸ்.பி.,யும் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

வாங்கியவர்கள் போட்டார்களா வேட்பாளர்களுக்குமண்ணை தூவி நடந்த பட்டுவாடா


ராமநாதபுரம்:"கொடுத்ததை பெற்றவர்கள் சரியாக ஓட்டளித்தார்களா,' என்ற, கவலை சில வேட்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதால் ஆழ்ந்த கவலையில் உள்ளனர். 2011 பிறந்ததும் புத்தாண்டை விட பலரும் தேர்தல் ஆண்டு தான் நினைவுக்கு வந்தது. கடந்த ஆண்டுகளில் களை கட்டிய இடைத்தேர்தலின் பார்முலாவே இந்நிலைக்கு காரணம். ஆட்சியை கைப்பற்ற அத்தியாவசியமான தேர்தல் என்பதால், இடைத்தேர்தலை விட இரட்டிப்பாக கொட்டும் என பலரும் ஆவலாய் இருந்தனர். அரசியல் கட்சியினர் உட்பட. "எங்கே போகிறது ஜனநாயகம்?,' என, சமூக ஆர்வலர்கள் கவலைப்பட்ட நேரத்தில், திருப்பு முனையாக வந்தது தேர்தல் கமிஷனின் கிடுக்குபிடி நடவடிக்கைகள். அறிவிப்பு வெளியான மறுநாளிலிருந்து கறார் நடவடிக்கைள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதனால் கட்சியினர் நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் திணறத்தொடங்கினர். தொட்டதுக்கு எல்லாம் வழக்குகள் என்ற பாலிசி, இம்முறை நன்றாக "வொர்க் அவுட்' ஆனது. கண்ணில் எண்ணெய் ஊற்றி நடந்த கண்காணிப்பு பணியிலும் சில கட்சிகள் குசும்புகளை அரங்கேற்றாமல் இல்லை. இருப்பினும் நினைத்த அளவுக்கு பணப்பட்டுவாடா செய்ய முடியவில்லை. அதிக பட்சமாக 300 ரூபாய் கொடுத்திருந்தாலே பெரிய விசயம் தான். மாவட்டத்தின் நான்கு தொகுதி நிலவரப்படி அதிக பட்சமாக பரமக்குடியில் தான் ஓட்டுக்கு சில இடங்களில் 500 வரை தரப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக திருவாடானை தொகுதியில் தான் ஓட்டுக்கு 100 ரூபாய் தரப்பட்டுள்ளது. முதுகுளத்தூர், ராமநாதபுரம் தொகுதியில் 150, 200 ரூபாய் என, இடத்திற்கு ஏற்றார் போல தொகை வினியோகம் மாறி உள்ளது. இருப்பினும் இவை எல்லாம் வெட்டவெளிச்சமாக வழங்கப்பட்ட பணம் அல்ல. அதிகாரிகளுக்கு பயந்து ஓடி ஒழிந்து வழங்கிய பணமாகும். இன்னும் சொல்லப்போனால், சில இடங்களில் எந்த கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை சொல்லாமலே பணம் வினியோகம் நடந்துள்ளது. அந்த அளவுக்கு அதிகாரிகள் மீது பயத்துடன் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. சில வேட்பாளர்கள் பணத்தை கொடுத்துவிட்டோம், ஓட்டு கிடைத்துவிடும் என்ற மிதப்பில் உள்ளனர். உண்மையில் நிலைமை இங்கு வேறுவிதமாக உள்ளது. பல இடங்களில் பணம் முழுமையாக போய் சேரவில்லை. சேர்ந்த இடங்களில் கொடுத்த அளவு பணம் வரவில்லை. "ரிஸ்க்' எடுத்து நடந்த பணவினியோகம், தங்களை "ரஸ்க்' சாப்பிடும் நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற கவலை வேட்பாளரிடத்தில் தொற்றி உள்ளது. ஓட்டு பதிவுக்கு பின் வேட்பாளர்கள் மூலம் ஒவ்வொரு தொகுதியின் பகுதியில் உள்ள ஆதரவாளர்களை வைத்து நடத்திய கணிப்பில், பணம் வாங்கிய பலரும் மாறி ஓட்டளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் வேட்பாளர்கள் சில உறக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.

தேர்தலால் ரேஷன் கடைகளில் கண்காணிப்பு, ஆய்வு இல்லை : எடையளவு குறைவு, தரமற்ற பொருள் வினியோகம்


ராமநாதபுரம் : தேர்தலை காரணம்காண்பித்து ரேஷன் கடைகளில் ஆய்வு செய்வது முற்றிலும் குறைந்துவிட்டதால் பல கடைகளில் எடையளவில் ஏமாற்றுவதும் தரமற்ற பொருள்களை வினியோகிப்பதாலும் பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த நாளிலேயே தேர்தல் விதிமுறை என தேர்தல் கமிஷனை காரணம் காண்பித்து ரேஷன் கார்டு வினியோகத்திலிருந்து பெயர் மாற்றம், நீக்கல், புதிய ரேஷன் கார்டு வழங்குதல் என அனைத்திற்கும் அதிகாரிகள் தடாபோட்டனர். இதற்குதான் தடா என்றால் பொருட்கள் வாங்குவதற்கும் தடா போட்டது போல் மக்களை சத்தமின்றி படாய்படுத்த துவங்கிவிட்டனர் ரேஷன்கடைக்காரர்கள். ரேஷன் கடையில் இரண்டு கிலோ சீனி வாங்கினால் ஒன்றரை கிலோ மட்டுமே உள்ளது.அந்தளவு எடையை எலக்ட்ரானிக் தராசில் துல்லியமாக நிறுத்து தருகின்றனராம். எடை கல்லில்தான் தில்லுமுல்லு நடந்தது என்றால் தற்போது எலக்ட்ரானிக் தராசிலும் தில்லுமுல்லு கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இதுதவிர கோதுமை, சீனி போன்ற பொருட்கள் மிகுந்த தூசியுடனும், சீனி ஈரத்தன்மையுடனும் தரமற்ற நிலையில் வினியோகிக்கின்றனர்.இதையெல்லாம் மக்கள் கேட்டால், "இதுதான் இருக்கிறது இஷ்டம் என்றால் வாங்கிகொள்ளுங்கள் இல்லையேல் தேர்தல் தடை முடிந்தபின் வாருங்கள்' என கூறுகின்றனர். தேர்தலுக்கும் ரேஷன் பொருள் வினியோகத்திற்கும் சம்மந்தமே இல்லாதநிலையில், கொடுப்பதை வாங்கி கொள்வோம் என அச்சத்துடன் பொது மக்கள் வாங்கி செல்கின்றனர். இதைபற்றியெல்லாம் அதிகாரிகள் ஆய்வு செய்யாததால் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆண்டுதோறும் தேர்தல் வந்தால் நமக்கு நன்றாக இருக்குமே என்ற நினைப்பில் உள்ளனர். வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் திறக்கும் கடை, ரேஷன் பொருள் வாங்க வரும் மக்களிடம் கடன்காரர்கள் போல் பாவிப்பது போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Saturday, 23 April 2011

கீழக்கரை அருகே சூதாட்ட கிளப் நடத்திய அ.தி.மு.க., பிரமுகர் கைது*டி.எஸ்.பி., மீது நடவடிக்கை


ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தனியார் தோப்பில் சூதாட்ட கிளப் நடத்தி வந்த, அ.தி.மு.க., நகர் செயலாளர் ராஜேந்திரன் உட்பட 13பேரை போலீசார் கைது செய்து, மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கீழக்கரை அருகே செங்கல்நீர் ஓடைபகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் காசிம் என்பவரது தோப்பு உள்ளது. இந்த தோப்பை கீழக்கரை அமர்தீன்(63) பராமரித்து வந்தார். இவரும், கீழக்கரை அ.தி.மு.க., நகர் செயலாளர் ராஜேந்திரனும் சேர்ந்து தோப்பில் சூதாட்ட கிளப் நடத்தி வந்தனர். இது, நாளடைவில் மதுபாருடன் கூடிய ஆடம்பர கிளப்பாக மாறியது. இங்கு தினமும் கீழக்கரை, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பலர் வந்து சென்றனர். பெரியளவில் கவனிப்பு நடந்ததால் உள்ளூர் போலீசார் கண்டுகொள்ளவில்லை . இதுகுறித்து ரகசிய தகவல் ராமநாதபுரம் ஏ.எஸ்.பி., சிபி சக்ரவர்த்திக்கு கிடைத்தது. அவர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு, ராமநாதபுரம் பஜார் இன்ஸ்பெக்டர் குணசுந்தரம், ராமநாதன் எஸ்.ஐ., உள்ளிட்ட தனிப்படையினர் சாதாரண உடையில் சூதாட்ட கிளப்பிற்கு சென்றுள்ளனர். அங்கு பிரியாணி, சூப், மதுவை அருந்தியவாறு ஒரு கும்பல் சூதாடி கொண்டிருந்தது. இது குறித்து எஸ்.பி., அனில்குமார் கிரிக்கு ஏ.எஸ்.பி., தகவல் கொடுக்கவே, கூடுதல் போலீசார் உதவியுடன் சூதாட்ட கிளப்பை சுற்றி வளைத்து அங்கிஒந்தவர்களை பிடித்தனர். கிளப் நடத்திய அ.தி.மு.க., நகர் செயலாளர் ராஜேந்திரன், அமர்தீன், சூதாடிய லோகநாதன், பாலமுருகன், சிராஜூதீன், அழகர்சாமி, கணேசன், ஜாகீர்உசேன், விஜயன், முகம்மது மீரா சாகிப், ஜாபர்அலி, தனபாண்டி, சிவன் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவான சேதுவை தேடி வருகின்றனர்.அங்கிருந்த மூன்று பைக்குகள், ஒரு மாருதி வேன், 12 மொபைல் போன், மதுபான பாட்டில்கள், 60 ஆயிரத்து 725 ரொக்க பணம் , எட்டு பவுன் தங்க நகை, சீட்டுகட்டுகள், டேபிள், சேர்களை பறிமுதல் செய்தனர்.
டி.எஸ்.பி.,மீது நடவடிக்கை : சூதாட்ட கிளப்பை உள்ளூர் போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்ததை அறிந்த அனில்குமார் கிரி எஸ்.பி., அங்கு பொறுப்பிலிருந்த முனியப்பன் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோரை ராமநாதபுரம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்தார். இதில், இன்ஸ்பெக்டர் இளங்கோவிற்கு தொடர்பு இல்லாதது தெரியவந்ததால், அவரை திருப்புல்லாணி கொலை வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளார்.

கீழக்கரை கடல் பகுதியில் படகு சவாரி : உறக்கத்தில் வனத்துறை

கீழக்கரை : கீழக்கரை,ஏர்வாடி,சேதுக்கரை உள்ளிட்ட கடல் பகுதியில் நாட்டுப்படகுகளில் சட்டத்திற்கு புறம்பாக மக்கள் தீவுகளுக்கு சென்று வருகின்றனர்.கண்காணிக்க வேண்டிய வனத்துறை அலுவலர்கள் உறக்கத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 26ல் கீழக்கரை அருகே பெரியபட்டினத்திலிருந்து சட்ட விரோதமாக முல்லித்தீவிற்கு சுற்றுலா சென்ற போது படகு கவிழ்ந்து 16 பேர் பலியாயினர்.இதை தொடர்ந்து , ""மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ,''என, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. சில மாதங்கள் அறிவிப்பை கடைப்பிடித்த நிலையில்,தற்போது வனத்துறையினரின் மறைமுக ஆதரவுடன் மக்கள் மீன்பிடி படகுகளில் தீவுகளுக்கு செல்கின்றனர். பாதுகாப்பற்ற படகு சவாரியினால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க,கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நாய் தொல்லையில் அலறும் ராமநாதபுரம்


ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் முன் அதை சரிசெய்ய அதிகாரிகள் முன்வரவேண்டும். முன்பெல்லாம் பாம்பு கடித்தால் பதறி மருத்துவமனை ஓடிய நிலை இருந்தது. இப்போது நாய் கடித்தாலே நகரத்தை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உயிருக்கு உலை வைக்கும் நோயை தரக்கூடிய நாய்கடியால் உயிர் இழந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலவரம் அண்டை மாநிலத்தில் நடந்ததில்லை. இங்கிருந்து இரண்டு மணி நேர பயணத்தில் உள்ள மதுரையில் தான் நாய்கடியில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை நாளிதழ்களில் படித்தாவது அதிகாரிகள் உஷாராகி இருக்கலாம். ராமநாதபுரத்தில் அந்த அளவு நாய்கள் தொல்லை உள்ளது. திருடனை பிடிக்க பயன்படும் என்ற பெயரில் தெருநாய்களின் உற்பத்தியை கடந்த ஓராண்டில் இருமடங்காக பெருக்கி உள்ளனர். எங்கு பார்த்தாலும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை இம்சித்து வருகிறது. முன்பெல்லாம் வீடுகளில் நாய் வளர்க்க அனுமதி பெற வேண்டும். அதை முறையாக பின்பற்றிய வரை எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது. வழக்கம் போல அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதால், இங்கு வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பதற்கு பதிலாக நாய்களை வளர்த்துள்ளனர். கருத்தடை செய்கிறோம் என்ற பெயரில், கணிசமான தொகை யை "ஸ்வாக' செய்தது தான் மிச்சம். தற்போதைய நாய்களின் எண்ணிக்கையை பார்த்தால், முன்பை விட அதிக அளவில் நாய்கள் உற்பத்தி ஆகியிருப்பது தெளிவாக தெரிகிறது. அப்படியெனில் இவர்கள் செய்த அறுவை சிகிச்சையின் வெற்றியை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. இனியாவது பிரயோஜனமான முடிவுகளை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும். சிறுவர், முதியோரை அச்சுறுத்தும் நாய்களை ஒழிக்க நகராட்சியினர் முன்வர வேண்டும்.

Friday, 1 April 2011

பயன்பாட்டுக்கு வருவது எப்போது?பஸ் ஸ்டாண்ட் பணியில் சந்தேகம்


ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை பயணிகள் வியாபாரிகள் முற்றுகையிட்டும், சிலரின் உள்நோக்கத்தால் புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் காலத்தாமதம் ஏற்படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ராமநாதபுரம் நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவங்கப்பட்டது. ஆரம்பம் நல்லாத்தான் இருந்தது ஆனா பினிசிங் சற்று மந்தமாகத்துவங்கி, தற்போது தேர்தலை காரணம் காண்பித்து முற்றிலும் கிடப்பில் போட்ட கதையாக மாறிவிட்டது.
பஸ் எங்கு நிற்கிறது என்பதை அறிந்து இங்கும் அங்கும் ஓடும் நிலையால் பயணிகள் கொந்தளித்துள்ளனர். பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி முடிவடையும் நிலையில், அதிகாரிகள் பார்வையிட்டு விரைவு படுத்த சரியான நடவடிக்கை எடுக்காததாலும், மதுரை மண்டல அதிகாரிகள் பார்த்து ஓகே கொடுத்தால்தான் அடுத்தகட்ட பணிகள் துவங்கப்படும் என கூறி, ஏற்கனவே காலத்தாமதம் செய்தனர். பின் ஒருவழியாக அதிகாரிகள் ஆடி அசைந்து பணிகள் செய்ய ஒகே கொடுத்த பின், வேகமாக நடப்பது போல் தெரிந்தது. ஆனால் ஏதோ சில காரணங்களால் பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் இங்குள்ள வியாபாரிகளும் பயணிகளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் பலமுறை புகார் தெரிவித்தும் இதோ சரிசெய்துவிடுவோம் என்றதோடு சரி, இதுவரை விடிவு காலம் பிறக்கவில்லை. தற்போது தேர்தலை காரணம் காண்பித்து, இப்போது முடியாது என முட்டுகட்டை போடும் நிலை உருவாகியதால், வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போதும் கமிஷனர், ""வரும் ஆனா வராது,'' என்ற கதைபோல் பதில் கூறி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் வியாபரிகள் மற்றும் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்ட பணியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதப்படுத்துவது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதன் மீது மாவட்ட நிர்வாகம் கவனம் கொள்ள வேண்டும் .

கடல் அட்டை பிடிக்க அனுமதி : ம.ம.க.,வேட்பாளர் ஜவாஹிருல்லா உறுதி


ராமநாதபுரம் : ""கடல் அட்டை பிடிப்பதற்கு மீனவர்களுக்கு உரிய அனுமதி பெற்று தர போராடுவேன்,'' என ராமநாதபுரம் தொகுதி ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரத்தில் பேசினார். ராமநாதபுரம் தொகுதியில் சாத்தான்குளம், பெருங்குளம், உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து அவர் பேசியதாவது: மீனவர்கள் பிரச்னை தீர்க்ககூடியதாக இருந்தாலும், இதுவரை சரியாக யாரும் அணுகாததால் மீனவர்களின் பிரச்னை கிடப்பில் உள்ளது. மீனவர்கள் நலன் காப்பதில் தி.மு.க., அரசு தவறிவிட்டது. மத்தியில் ஆளும் காங்., அரசும் மீனவர் நலன் காக்காததால் ஏராளமான மீனவர்கள் தொழிலுக்கு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து கடல் அட்டை பிடித்து செல்கின்றனர் .ஆனால் இங்குள்ள மீனவர்கள் கடல் அட்டை பிடிப்பதற்கு தடைவிதித்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம். கடல் அட்டை பிடித்ததாக அப்பாவி மீனவர்களை கைது செய்து கொடுமை படுத்துகின்றனர். அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா கண்டிப்பாக முதல்வராவார். அவர் முதல்வரானவுடன் மீனவர்களின் நலன் காக்கும் திட்டங்கள் வகுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலோர பகுதிகளில் கடல்சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்படும், கடல் அட்டை பிடிப்பதற்கான உரிய அனுமதி பெற்றுதர போராடுவோம், மீனவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும். கருணாநிதி ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. ஆனாலும் கச்சத்தீவில் மீனவர்கள் வலைகளை காயப்போடுவதற்கும், தங்குவதற்கும் உரிமை உண்டு. இந்த உரிமைகூட தற்போது தட்டிபறிக்கப்பட்டுள்ளது. ஜெ., முதல்வரானவுடன் கச்சத்தீவு மீட்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் .அதற்கு ம.ம.க., முழு முயற்சி எடுக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் .அதன்படி சரியான தீர்வை தரஉள்ளனர். ராமேஸ்வரம் பகுதியில் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதற்கு தகுந்த தீர்வு எடுக்கப்படும்.மக்கள் சேவை செய்வதில் ம.ம.க., தீவிரமாக உள்ளது, என்றார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, முருகேசன் உட்பட பலர் உடன் சென்றனர்.

காங்., வேட்பாளர் ஹசன் அலிக்கு சிறுபான்மை பிரிவு எதிர்ப்பு


ராமநாதபுரம் : ""ராமநாதபுரம் தொகுதி காங்.,வேட்பாளர் ஹசன்அலிக்கு பிரசாரம் செய்வதற்கு வெட்கமாக இருப்பதாக,'' அக்கட்சியினர் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முகம்மது மக்தும் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹசன்அலி எம்.எல்.ஏ., கடந்த ஐந்தாண்டுகளில் மக்களை சந்திக்கவில்லை. தொகுதி குறைகளையும் கேட்கவும் இல்லை. இது மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்., கட்சிக்காக ஒரு உறுப்பினரை கூட சேர்த்தது இல்லை. இலங்கை அதிபர் ராஜபக்சேயின் நண்பரான ஹசன்அலியோடு சேர்ந்து பிரசாரம் செய்ய வெட்கமாக உள்ளது , என, தெரிவித்துள்ளார்.

SDPIன் இராமநாதபுரம் சட்டமன்ற தலைவர் S.ஃபைரோஸ் கான் அவர்களின் தேர்தல் அறிக்கை



 
Free Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Website templateswww.seodesign.usFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver