Thursday, 24 February 2011

ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ., : மூன்றாம் அணி வேட்பாளர் தயார்

ராமநாதபுரம் : "ராமநாதபுரம் சட்டசபை தொகுதி சிறுபான்மையினர் செல்வாக்கு பெற்றது,' என்ற தோற்றம் ஏற்படுவதை தடுக்க பா.ஜ., புது திட்டம் போட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., கண்டுகொள்ளாத நிலையில், தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ., உள்ளது. கூட்டணி, வேட்பாளர்கள், போட்டியிடும் தொகுதிகள் என எந்த சத்தமும் இல்லாமல் பா.ஜ., அமைதி காத்து வருகிறது. இதற்கிடையில் ராமநாதபுரம் சட்டசபை தொகுதியை சிறுபான்மையினர் செல்வாக்கு பெற்ற தொகுதி போல சித்தரித்து வருவதை தடுக்க பா.ஜ.,வினர் இம்முறை புது திட்டம் வகித்து வருகின்றனர். இதன் மூலம் ராமநாதபுரத்தில் பா.ஜ., போட்டியிட உறுதிசெய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் பா.ஜ.,விற்கு கணிசமான ஓட்டு கிடைக்கும் எதிர்பார்க்கப்படும் நிலையில், ராமநாதபுரம் நகர் ஓட்டுகளை வாங்கும் வியூகங்களை அக்கட்சியினர் ஆராய்ந்து வருகின்றனர். "ராமநாதபுரத்தில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்தை சார்ந்தவரை வேட்பாளராக நிறுத்தினால் நகர் ஓட்டுகளை அள்ளலாம்,' என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுடைய வேட்பாளரை தேர்வு செய்து கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். இது ஒருபுறமிருக்க மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் இணைந்து, தொகுதியில் பா.ஜ.,வுக்கு ஆதரவான பகுதிகளுக்கு சென்று ரகசிய ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராமநாதபுரத்தில் மும்முனை போட்டி இருக்கலாம் என தெரிகிறது.

Sdpi Chennai Zonal Conference

Saturday, 19 February 2011

SDPI-யின் சென்னை மண்டல மாநாடு நேரடி ஒளிபரப்பு - 20/02/2011

Friday, 18 February 2011

வி.ஏ.ஓ.,க்கள் வேலை நிறுத்தம்


பரமக்குடி : பரமக்குடியில் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வி.ஏ.ஓ.,க்கள் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். பரமக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில், வட்டத்தலைவர் பூப்பாண்டி கிராம உதவியாளர்கள் மாவட்ட செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் கோவிந்தன் வரவேற்றார். சர்வேயர் மாநில துணைத்தலைவர் காந்தி, சேவியர் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் பலர் பங்கேற்றனர். வட்ட பொருளாளர் பாண்டி நன்றி கூறினார்.

செய்தி : தினமலர்

பேச்சாளை கழிவால் கவிழ்ந்தது "108''


மண்டபம்:மண்டபம் ரோட்டில் சிந்திய பேச்சாளை கழிவால்"108 ' ஆம்புலன்ஸ்கவிழ்ந்தது.தடைசெய்யப்பட்ட இரட்டைமடி தொழில் மீன்துறை அதிகாரிகளின் ஆசியுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.இரட்டைமடியில் பேச்சாளைகள் டன் கணக்கில் பிடிபடுகின்றன.பேச்சாளைகள் டிராக்டர் மற்றும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.இதனால் ரோடுகளில் பேச்சாளையின் கழிவுகள் சிந்துகின்றன.கழிவுகள் எண்ணெய் போன்று இருக்கும்.கழிவுகளால் ரோடுகளில் செல்லும் இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் நிலை குழைந்து கீழே விழுகின்றன.கடந்த ஒரு வாரத்திற்குள் 10 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஒட்டிகள் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.நேற்று அவசர அழைப்புக்கு வரும் "108 'ஆம்புலன்ஸ் பேச்சாளை கழிவால் மண்டபம் கேம்ப் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.ஊழியர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.தேசிய நெடுஞ்சாலையில் பேச்சாளை கழிவினால் விபத்துகள் மட்டுமல்லாது துர்நாற்றமும் வீசுகிறது.

செய்தி : தினமலர்

திருவாடானையை குறிவைக்கும் கட்சிகள்


திருவாடானை:திருவாடானை தொகுதியை தங்கள் கட்சிக்கு ஒதுக்கசெய்யும் வகையில் வி.ஐ.பி.,க்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய கட்சிகளின் கூட்டணி முடிவாகாத நிலையில், திருவாடானை தொகுதியை சேர்ந்த வி.ஐ.பி.,க்கள் சென்னையில் முகாமிட்டு சீட் கேட்கும் முயற்சியில் உள்ளனர். திருவாடானை தொகுதி தற்போது காங்., வசம் உள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ., ராமசாமியின் சொந்த ஊரான கண்ணங்குடி ஒன்றியம், தொகுதி சீரமைப்பில் காரைக்குடி தொகுதியுடன் சேர்ந்து உள்ளதால்,இவர் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்ற பேச்சு அடிபடுகிறது.ஆனால் அவருடைய ஆதரவாளர்கள், திருவாடானை தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இத் தொகுதியை தி.மு.க.,விற்கு பெற்றுவிட அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில் அக் கட்சியினர் தீவிர முயற்சியில் உள்ளனர். இதுவரை நடந்த தேர்தலில் இத் தொகுதியில் ஒரு முறை மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இமமுறை அ.தி.மு.க. , விற்கு பெற்றுவிட மாவட்ட செயலாளர் ஆனிமுத்து மற்றும் அ.தி.மு.க.,வினர் தீவிர முயற்சியில் உள்ளனர். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ள த.மு.மு.க.,வின் மனித நேய மக்கள் கட்சி சார்பில் தொண்டியில் சில தினங்களுக்கு முன் ஊழியர் கூட்டம் நடந்தது. இதில் பேசிய தலைவர்கள் திருவாடானை தொகுதியை ம.ம.க.,விற்கு ஓதுக்க வலியுறுத்துவதாக பேசினர்.தே.மு.தி.க.,வும் இத்தொகுதியை குறிவைத்துள்ளது. இதற்காக இத் தொகுதியில் போட்டியிட விரும்பும் வி.ஐ.பி.,க்கள் இப்போதே சென்னையில் முகாமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர்.

செய்தி : தினமலர்

நம்பிக்கை இழக்கும் தகவல் உரிமை சட்டம்


ராமநாதபுரம் : தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதில், ஆறு மாதங்களாக இழுத்தடிக்கப்படுவதால், அச்சட்டத்தின் மீது பொது மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ல் துவங்கப்பட்டு,பல்வேறு துறைகளில் தேவையான தகவல்களை இச்சட்டத்தின் கீழ் பெற வழிசெய்யப்பட்டது. தமிழகத்தில் பல துறைகளில் எளிதில் தகவல்களை பெறமுடியாத நிலை உள்ளது. இதனால் துறைகளில் ஏற்படும் தவறுகளை கண்டுபிடிக்கமுடியாத சூழலும், அதேநேரத்தில் தவறு செய்யும் துறை அதிகாரிகளுக்கு துணைபோகும் விதமாக தகவல் பெறும் உரிமை ஆணையம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவல் பெறும் உரிமை சட்டத்தில் 30 தினங்களுக்குள் பதில் தராவிட்டால், தினம் சூ 250 அபராதம் விதிக்கப்படும் என உள்ளது. நடைமுறையில் இதை யாரும் கண்டுகொள்வதில்லை. தகவல் பெறும் உரிமை ஆணையமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை காப்பாற்றும் விதமாக, "மனுதாரருக்கு தேவையான தகவல்களை கொடுத்து உதவுங்கள்,' என, கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டணத்தை சேர்ந்த செய்யது இபுராகிம் என்பவர் 2010 ஆக.,4ல் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்து இதுவரை பதில் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர், கலெக்டர், தகவல் பெறும் ஆணையம் என அனைத்திற்கும் தபால் அனுப்பியும் முறையான நடவடிக்கை இல்லை. இதேநிலை இன்னும் பலருக்கும் ஏற்பட்டுள்ளது என்பதுதான் வேதனையான தகவல்.

Tuesday, 15 February 2011

ஊராட்சி தலைவருக்கு தீண்டாமை விருது..

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொளுந்துரையில் அனைத்து மத, சாதியினரும் வசித்து வருகின்றனர். இங்கு கிராம திருவிழாக்களின்போதும், மற்ற மத விழாக்களையும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நடத்தி வந்தனர். இதனால் இங்கு பாகுபாடுகள் இல்லாமல் அனைத்து தரப்பினரும் உறவினர்கள்போல் வாழ்ந்து சாதி, மத பிரச்னைகள் இல்லாமலும், தீண்டாமையை அறவே ஒழித்து கட்டுப்பாடுள்ள கிராமமாக நடைமுறைப்படுத்திய கொளுந்துரை ஊராட்சி தலைவர் ராசாத்திகோவிந்தராஜனுக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தீண்டாமை ஒழிப்பு கிராம விருதினையும் வழங்கி பாராட்டினார். விருது பெற்ற ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா நடத்த கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர்.

செய்தி : தினமலர்

இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்..

ராமநாதபுரம் : மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் மிஷன் வழங்கப்படுகிறது. பெற விரும்புவோர் சான்றுகளுடன் விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பிப்., 18ம் தேதிக்குள் அனுப்பவும். "வருமானம் ,சாதி, இருப்பிடம், வயது, தையல் படிப்பு, பாதிப்பு குறித்த,' சான்றுகளை உடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

செய்தி : தினமலர்

எகிப்து மக்களுக்கு வாழ்த்துக்கள்......


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆச்சார்யா மடம் அருகில் 15/02/2011 அன்று மாலை 6 மணியளவில் சர்வாதிகார ஆட்சியை சவுக்கடி கொடுத்து புரட்சியின் மூலம் எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியை வீழ்த்திய எகிப்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், தற்போது நிலவி வரும் இரானுவ ஆட்சியை அகற்றி ஜனநாயக ஆட்சியை மலரச்செய்ய இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் மு.செய்யது ஹாலிது த்லைமை தாங்கினார். ஷோஸியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(SDPI) மாநில செயற்குழு உறுப்பினர் B.அப்துல் ஹமீது, SDPIன் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் M.I.நூர் ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் சிறப்புரையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.K.அஸ்கர் அலி நிகழ்த்தினார். இறுதியாக சகோதரர் அப்பாஸ் அலி நன்றியுரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நான்.

Sunday, 13 February 2011

கண் சிகிச்சை முகாம்..


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து இராமநாதபுரம் பெரியபட்டினத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் சென்ற 12/02/2011 அன்று பெரியபட்டினம் அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில் நடந்தது. முகாமை பெரியபட்டினம் ஊராட்சித் தலைவர் அப்துல் ரஹீம் துவங்கி வைத்தார். மதியம் 2 மணி வரை நடந்த முகாமில் 168 நபர்கள் கலந்துகொண்டனர். அதில் 30 நபர்கள் இலவச அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கலந்து கொண்ட மக்கள் அனைவரும் பயன்பெற்று பாராட்டிச் சென்றனர்.


Thursday, 10 February 2011

கொடியேற்று நிகழ்ச்சி..


சோஸியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தேவிபட்டினம் கிளை சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி 10/02/2011 மாலை 4:30 மணியளவில் தேவிபட்டினம் கடைவீதி அருகில் தேவிபட்டினம் SDPI நகர தலைவர் M.முஹம்மது முஹைதீன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேவிபட்டினம் SDPI நகர பொருளாளர் A.யாசர் அரபாத் அவர்கள் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு SDPIன் மாவட்ட துணைத் தலைவர் T.N.கருணாகரன் B.Sc,B.L, மாவட்ட செயலாளர் A.முஹம்மது சரீஃப் தேவிபட்டினம் கிளை துணைத்தலைவர் S.சுல்த்தான் நலீம், கிளை துணைஸ் செயலாளர் K.அலாவுதீன், நகர் கமிட்டி உறுப்பினர் A.பைசல் அஹமது, நகர் கமிட்டி உறுப்பினர் S.மைதீன், நகர் கமிட்டி உறுப்பினர் S.தமீம் அன்சாரி, சித்தார்கோட்டை கிளை தலைவர் S.சஃபிக் ரஹ்மான், வாழூர் கிளை தலைவர் A.ரஹ்மத்துல்லாஹ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். SDPIன் மாவட்ட தலைவர் M.I.நூர் ஜியாவுதீன் கொடியேற்றி சிறப்பித்தார். SDPIன் மாநில செயற்குழு உறுப்பினர் B.அப்துல் ஹமீது அவர்கள் சிறப்புரையாற்றினார். தனது சிறப்புரையில் SDPIன் செயல்பாடுகள் குறித்தும் சென்னை மண்டல மாநாடு குறித்தும் தெளிவாக விளக்கிக்கூறினார். இறுதியாக தேவிப்பட்டினம் கிளை தலைவர் A.M.சுல்த்தான் அலி நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.



ம.ம.க., குறிவைக்கும் ராமநாதபுரம், திருவாடானை : அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு சிக்கல்


ராமநாதபுரம் : ராமநாதபுரம், திருவாடானை சட்டசபை தொகுதிகளில் ஒன்றை கைப்பற்ற ம.ம.க., கடும் முயற்சி செய்து வருவதால், "சீட்' கனவில் உள்ள அ.தி.மு.க.,வினர் "கிலி'யில் உள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.,வும் கூட்டணி பேச்சு வார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மு.மு.க.,வின் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தொகுதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் திருவாடானை அல்லது ராமநாதபுரம் தொகுதியை அக்கட்சியினர் விரும்பி கேட்டு வருகின்றனர். மாவட்ட செயலாளர் ஆணிமுத்து திருவாடானை தொகுதியையும், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா ராமநாதபுரம் தொகுதியையும் குறிவைத்துள்ள நிலையில், ம.ம.க.,வின் முயற்சி இருவருக்கும் "கிலி'யை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளாக உள்ள இருவருக்கும் இத்தகவல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.அதே நேரத்தில் திருவாடானை தொகுதியை கேட்டு முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் தரப்பும் காய் நகர்த்தி வருகிறது. இவர் கட்சி பணியில் தொடர்ந்து நீடிப்பதால், நடராஜனுக்கு இம்முறை திருவாடானையில் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பேச்சு பலமாக உள்ளது.அ.தி.மு.க.,கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெற்றால் இத்தொகுதியை வாங்க தே.மு.தி.க.வும் கடும் முயற்சி மேற்கொள்ளும்.அதுபோன்ற பட்சத்தில் இங்கு போட்டியிட மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன்,தொகுதி பொறுப்பாளர் அழகு பாலகிருஷ்ணனும் களத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர். ராமநாதபுரத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முருகேசன், முனியசாமி ஆகியோர் "சீட்' வாங்க கடுமையாக முயற்சிக்கின்றனர். தேவையற்ற போட்டியை தவிர்க்க இத்தொகுதியை கூட்டணிக்கு தாரை வார்க்க அ.தி.மு.க., தலைமை முன்வரலாம். பரமக்குடி தனித்தொகுதியாக இருப்பதால் அங்கு "சீட்' பெறுவதில் முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பில்லை. முதுகுளத்தூரில் போட்டியிடும் அளவுக்கு இங்குள்ள நிர்வாகிகளுக்கு அங்கு செல்வாக்கும் இல்லை.

செய்தி : தினமலர்

Sunday, 6 February 2011

பிச்சையெடுக்கும் சிறுவர்கள் : பெற்றோரே ஆதரிக்கும் பரிதாபம்


ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பள்ளி செல்லும் வயதில் பிச்சையெடுக்கும் சிறுவர்களின் பரிதாப செயலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமேஸ்வரத்தில் பிச்சையெடுப்பதை தொழிலாக கொண்டவர்கள் ஏராளம். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 200 முதல் 400 ரூபாய் வரை கிடைப்பதாலும், யாத்ரீகர்கள் தரும் துணி, உணவுக்காக பிச்சையெடுத்து சம்பாதிக்கின்றனர். வருமானம் அதிகளவில் வருவதால் வெளியூர்களில் இருந்து வந்து இங்கு முகாமிட்டுள்ள இவர்கள், ராமேஸ்வரம் கோயில், அக்னிதீர்த்த கடற்கரை, கெந்தமாதன பர்வதம் பகுதியில் பிச்சையெடுப்பதை தொழிலாக செய்கின்றனர். இதில் உள்ளூர் கும்பலை சேர்ந்தவர்களும், வெளியூர் பிச்சைக்காரர்களுக்கு போட்டியாக பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர். இதன் வருவாயில் ஒரு பகுதியை குடிப்பதற்கும், மீதியை ஊரிலுள்ள தங்களது குடும்பத்திற்கு அனுப்பி வரும் இவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.பள்ளிசெல்லும் வயதுடைய சிறுவர்களையும் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துவதும் அதிகரித்துள்ளது. பெற்றவர்களே பணத்துக்காக பிள்ளைகளை இச்செயலில் ஈடுபடுத்துகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நூற்றுக்கும் குறைவாக இருந்த பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை இன்று 500ஐ தாண்டிவிட்டது. இரண்டு ஆண்டுக்கு முன் சிறுவர்களை பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இச்செயல் தவிர்க்கப்பட்டது. ஆனால் தற்போது பள்ளிசெல்லும் வயதுடைய சிறுவர்கள் பிச்சையெடுப்பதை அதிகாரிகளே வேடிக்கை பார்த்து செல்லும் அவல நிலை தொடர்கிறது. ரோட்டின் ஓரங்களில் அமர்ந்துள்ள இவர்கள் கிடைத்ததை உண்டு அங்கேயே படுத்து தங்களது வாழ்க்கையை கழித்தாலும், இவர்களின் வருவாய்க்கு மட்டும் குறைவில்லை. மன நலம் பாதிக்கப்பட்டு ரோடுகளில் திரியும் ஆதரவற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பிச்சைக்காரர்கள் போர்வையில் வருவாய் ஈட்டிவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, சிறுவர்களை பிச்சையெடுக்கும் செயலில் ஈடுபடுத்துபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு முன்வரவேண்டும்.

செய்தி : தினமலர்.

தாசீம்பீவி கல்லூரி முதல்வருக்கு விருது


கீழக்கரை: கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுமையாவிற்கு தேசிய சிறுபான்மை கல்வி நிறுவன ஆணையத்தின் சார்பில் சிறுபான்மை பெண்கள் கல்வி பணியில் ஆற்றிய சேவையை பாராட்டி, சென்னையில் விருது வழங்கப்பட்டது.செயலாளர் காலித் ஏகே புகாரி,தாளாளர் டாக்டர் ரஹ்மத்துனிசா,யூசுப் சுலைஹா டிரஸ்ட் நிறுவனர் குர்ரத் ஜமிலா,கிரஸண்ட் குரூப்ஸ் இயக்குனர் டாக்டர் ஷரீபா,சீதக்காதி அறக்கட்டளை துனை பொது மேலாளர் சேக்தாவுத்,துணை முதல்வர் நாதிரா பானு மற்றும் துறை தலைவர்கள்,பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள் வாழ்த்தினர். இதை தொடர்ந்து தாசிம்பீவி கல்லூரியில் மாணவிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சிநடந்தது. கல்லூரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார். மாணவி ஷாநாஸ் கிராஅத் ஓதினார். முன்னாள் ரயில்வே அமைச்சர் ஜாபர் ஷெரீப் கலந்து கொண்டுபேசியதாவது:அனைத்து துறைகளிலும் இந்திய பெண்களின் நிலைப்பாடு உயர்ந்து உலக நாடுகளில் தலை நிமிர செய்துள்ளது.பெண்கள் மேலும் கல்வியில் தன்னிறைவு பெற வேண்டும்.வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் கூட, இங்கு பெண்களிடம் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சியை கண்டு இந்தியாவில் கல்வி கற்று வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்தால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்,என்றார். மாணவி ஹூசைனியா நன்றி கூறினார். மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை தென்பிராந்திய ஆய்வாளர் முகம்மது சித்திக், முகம்மது ரபீக்,மோகன்,நசீர் பாட்சா,கல்லூரி துணை முதல்வர் முனைவர் நாதிரா பானு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கொடியேற்று நிகழ்ச்சி..


சோஸியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் பனைக்குளம் கிளை சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி 06/02/2011 மாலை 4:50 மணியளவில் பனைக்குளம் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகில் பனைக்குளம் SDPI கிளை தலைவர் A.முஹம்மது ரியாஸ்தீன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு A.ரியாஸ் அஹமது,B.Sc, அவர்கள் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு SDPIன் மாவட்ட தலைவர் M.I.நூர் ஜியவுதீன், பனைக்குளம் கிளை துணை தலைவர் S.முஹம்மது தீன், பனைக்குளம் கிளை செயலாளர் S.முஹம்மது நசீர், பனைக்குளம் கிளை இணைச்செயலாளர் U.அன்வர் மைதீன், பனைக்குளம் கிளை பொருளாளர் M.முஹம்மது இபுராஹிம், புதுவலசை நகர தலைவர் M.ஃபஜல் ரஹ்மான், சித்தார்கோட்டை கிளை தலைவர் S.சஃபிக் ரஹ்மான், வாழூர் கிளை தலைவர் A.ரஹ்மத்துல்லாஹ், அழகங்குளம் நகர் தலைவர் A.சஹிர் தீன், தேவிபட்டினம் நகர் தலைவர் M.முஹம்மது முஹைதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட செயலாளர் முஹம்மது சரீஃப் அவர்கள் கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.அப்துல் ஜமீல் சிறப்புரையாற்றினார். சிறப்புரையில் SDPIயின் அவசியம் பற்றி பேசினார். இறுதியாக S.ஹபீப் ரஹ்மான் M.B.A, நன்றியுரை. நிகழ்ச்சிக்கு பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Saturday, 5 February 2011

சுற்றுலாதலமாக அறிவித்தும் நோ ரியாக்ஷன்


இராமநாதபுரம் மாவட்டத்தின் அமைச்சர் தங்கவேலன் தொகுதியில் உள்ளது ஏர்வாடி ஊராட்சி. இங்கு பஞ்சமில்லாத அளவில் குறைகள் நிறைந்து உள்ளன. இங்குள்ள பாதுஷா நாயகம் தர்கா மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.1996ல் சுற்றுலாதலமாக அறிவிக்கப்பட்ட ஏர்வாடியில் இன்று வரை சுற்றுலா துறையின் மூலம் எந்த முன்னேற்றமும் இல்லை.அடிப்படை வசதிகள் இல்லாதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்த ஊராட்சியை தரம் உயர்த்தவும் எந்த நடவடிக்கையும் இல்லை .நிதிப் பற்றாக்குறையால் ஊராட்சியால் கூட தேவையான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.இங்குள்ள மன நலகாப்பகத்தில் 2001 ஆகஸ்ட் ஆறாம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 28 பேர் உடல் கருகி இறந்தனர். இதையடுத்து அனுமதியின்றி செயல்பட்ட மனநல காப்பகங்கள் மூடப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனைக்கு மன நோயாளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் பின் எந்த நடவடிக்கையும் இல்லாததால், இன்று கந்தலாடை,அழுக்குபடிந்த உடல்,வறண்ட தலைமுடி கோலத்தில் ஏராளமான மனநோயாளிகள் திரிகின்றனர். இதில் பலரோ இரவு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் தர்கா பகுதியில் உலா வருகின்றனர்.இவர்கள் யார்?எந்த ஊர்?இவர்களை விட்டு செல்வது யார்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளும் மக்கள் மனதில் எழுகின்றன. ஆனால் இதற்கான விடை புரியாத புதிராக உள்ளது.இவர்களோ பசியின் காரணமாக ஓட்டல்களில் உள்ள பலகாரங்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிப்பதும், சிலர் பொதுமக்களையும், யாத்ரிகர்களையும் தாக்குவதையும் வழக்கமாக கொண்டுள்னர். சில நேரங்களில் இவர்கள் நடை பயணமாக கீழக்கரை,ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்கின்றனர். இரவு நேரத்தில் நடந்த செல்லும் போது வாகனங்கள் மோதி பலியாகுவதும் தொடர்கிறது. மனிதநேயத்தை காப்பதாக கூறி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏர்வாடி பக்கம் தலை காட்டுவதே இல்லை.இங்குள்ள மனநோயாளிகளை கண்டு கொள்வதும் இல்லை. மாவட்ட நிர்வாகமும் அவ்வப்போது ஆறுதலுக்காக மனநல காப்பகம் குறித்து அறிக்கை வெளியிட்டு நாட்களை கடத்தி வருகின்றன . ஆனால் மன நோயாளிகளை கரை சேர்க்க இதுவரை எந்த ஆயத்தப்பணிகளும் மேற் கொள்ள வில்லை என்பதுதான் நிஜம் . மற்றொரு பக்கமோ பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.வெளி மாநிலங்களில் இருந்து குடும்பமாக வந்த இவர்கள், கிழிந்த துணி ,அரைகுறை ஆடைகளுடனும் கூட்டமாக ,தர்கா பகுதியிலே தங்கி பிச்சை எடுத்து வருகின்றனர்.கல்வி கற்க வேண்டிய சிறுவர்,சிறுமிகளும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதுதான் வேதனையான விசயம். இது மட்டுமன்றி கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. காவிரி குடிநீர் திட்டப்பணிகள் முழுமையடையாததால், தேவையான அளவு காவிரி குடிநீர் வினியோகம் இல்லை. ராமநாதபுரம், உச்சிப்புளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து லாரிகள்,டிராக்டர்களில் குடி நீர் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர் . குடிநீருக்காக பெரும் தொகையை செலவழிக்கின்றனர். யாத்ரீகர்களோ கடைகளில் விற்பனை செய்யப்படும் தரமில்லாத போலி குடிநீர் பாக்கெட் வாங்கி குடிக்கின்றனர். சுற்றுலா தலமாகவும்,ஆன்மீக தலமாகவும் பெருமை கொண்ட ஏர்வாடியில் சுகாதார துறையினர் தலை காட்டுவதே இல்லை. இதனால் மக்கள் மற்றும் யாத்ரீகர்கள் சுகாதாரமான உணவுகளை அறிய முடியாத நிலை உள்ளது.பல லட்சம்ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை.கட்டடம் தற்போது சிதிலடைந்து முற்புதர் நிறைந்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான வசதிகள் இருந்தும் டாக்டர்கள் பற்றாக்குறையால் மருத்துவ உபகரணங்கள் முடக்கப்பட்டுள்ளது. உயர் சிகிச்சை பெற தனியார் மருத்துவமனை செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். ஐந்து டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய இங்கு ஒரே டாக்டரே பணியில் உள்ளார். நர்சுகளே நோயை கேட்டறிந்து மருந்து, மாத்திரைகளை வழங்குகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையையொட்டி மருத்துவமனை இருந்தும் இரவு நேர டாக்டர் இல்லாததால் விபத்து காலங்களில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. 63 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் , பயணிகள் இந்த பக்கம் தலை காட்டுவதே இல்லை.பெயரளவிலே அரசு பஸ்கள் மட்டும் வந்து செல்கிறது. சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற முடியவில்லை.இதன் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்து காய்ச்சல் பரவும் நிலை தொடர்கிறது. மீன்பிடி படகுகள் அதிகம் நிறைந்த ஏர்வாடியில் துறைமுகம் இல்லாததால் படகுகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மீனவர்களின் வாழ்க்கை தரம் அதிகரிக்கவும் உருப்படியான திட்டங்கள் இல்லை. மீனவர்களுக்காக கட்டப்பட்ட ஐஸ் பேக்டரி,லேத் பட்டறை மூடப்பட்டு கட்டடம் சிதிலடைந்து , முட்புதர்களுடன் காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் துருப்பிடித்த நிலையில் உள்ளது.தர்கா எதிரில் டாஸ்மாக் கடை இருப்பதால் மதுபான பிரியர்களின் தொந்தரவால் யாத்ரீகர்கள் சிரமமடைகின்றனர். இங்கு "ஓப்பன்' பார் உபயோகம் அதிகரித்துள்ளது.இதனால் இந்த வழியாக செல்லும் பெண்கள் பீதியில் உள்ளனர். வங்கி ஏ.டி.எம்.,மையம் இல்லாததால் பணம் எடுக்க கீழக்கரை , ராமநாதபுரம் செல்ல வேண்டும். இதனால் மன உளைச்சலும்,பண விரையமும் ஏற்படுகிறது.பல்வேறு வங்கியினர் ஆய்வு பணிகள் நடத்தி சென்றும் கண் துடைப்பாக உள்ளது.இப்படி பல்வேறு குறைபாடுகளுடன் ஏர்வாடி விளங்கி வருகிறது. மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக விளங்கும் ஏர்வாடி , வளர்ச்சி பாதையில் பின்னோக்கி செல்கிறது."யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்' என அழைக்கும் ஆன்மிக மண்ணின் சொந்தக்காரர்களின் வாட்டத்தை போக்க யார் முன் வருவார்களோ என்ற ஏக்கம் இங்குள்ள மக்களிடையே உள்ளது.

Thursday, 3 February 2011

மனு வாங்க எம்.எல்.ஏ., "பிகு' : ஆர்வமாக வந்தவர்கள் திகைப்பு

ராமநாதபுரம் : மனு அளிக்க வந்தவர்களிடம் அறிவுரை வழங்கிய ஹசன்அலி எம்.எல்.ஏ., வின் செயல் பொதுமக்களை எரிச்சலடைய செய்தது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மண்டபம் அருகே சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் நிலம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு கேட்டு மனு அளிக்க வந்தனர். அந்த சமயத்தில் மாவட்ட ஊராட்சி குழுதலைவர் ரவிச்சந்திரராமவன்னியை சந்திக்க ஹசன்அலி எம்.எல்.ஏ., வந்தார். வழக்கத்துக்கு மாறாக எம்.எல்.ஏ.,வை கண்ட மக்கள், அவரிடம் முறையிட கூட்டமாக ஓடினர். இதை சற்றும் எதிர்பாராத எம்.எல்.ஏ.,விடம், தங்கள் நிலை குறித்து பொதுமக்கள் விளக்கி மனு அளித்தனர். வழக்கமான தனது பாணியில், "" இப்படி பார்த்த இடத்தில் எல்லாம் பாத்திகா(பிரார்தனை) ஓதக்கூடாது, என்னை பார்த்து மனு கொடுக்க வேண்டியது தானே,'' என்றார். மனு அளிக்க வந்தவர்களுக்கு நீண்ட அறிவுரை வழங்கிய எம்.எல்.ஏ., ""சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி தீர்வுக்கு வழிகாண்கிறேன்,'' என்றபடி, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

த.மு.மு.க., கூட்டம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் த.மு.மு.க., கிளை கூட்டம் நகர தலைவர் அமீர்கான் தலைமையிலும், ம.ம.க., மாவட்ட செயலாளர் ஜபருல்லாகான் முன்னிலையிலும் நடந்தது. அ.தி.மு.க., கூட்டணியில் த.மு.மு.க., இடம்பெற்றுள்ளதால் முழு ஆதரவுடன் வெற்றி பெற பணியாற்றவேண்டும் எனவும், இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட சிவகுமாருக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் அஜீஸ்கனி, த.மு.மு.க., ஒன்றிய தலைவர் வாவாராவுத்தர், செயலாளர் அமிருல்ஹக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விபத்திற்கு தயாராகும் அரசு பள்ளி : குறட்டையில் அதிகாரிகள்

பெரியபட்டினம் : பெரியபட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில், உயர்அழுத்த மின் வயர்களால் , மாணவர்களுக்கு பேராபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்கள் உள்ளனர்.பெரியபட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்கள் தலைக்கு மேல் உள்ள அபாயத்தை அறியாமல், விளையாடுவதும், மைதானத்தில் அமர்ந்து மதிய உணவை உண்பதுமாக உள்ளனர். இளம்கன்று பயமறியாது என்றாலும், பெற்றோர்களோ ," விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் தினமும் கடவுளை வேண்டி ' வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த உயர்அழுத்த மின் வயர்கள் ஆங்காங்கே அறுந்தநிலையில், பலமுறை ஒட்டுபோட்டு அப்படியே விட்டு உள்ளனர். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் விளையாடும் போதோ, நடந்து செல்லும்போதோ, வயர் அறுந்து விழுந்தால், உயர் அழுத்தம் காரணமாக பள்ளி மாணவர்களின் உயிர்பலி கொத்து கொத்தாக நடக்கும் அபாயம் உள்ளது.
பள்ளியின் நடுவே செல்லும் மின்வயர்களால் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளதை தெரிந்தும், மின்வாரிய அதிகாரிகளே, "உரிய கட்டணத்தை செலுத்தினால்தான் அகற்றுவோம்,' என்ற, பிடிவாதத்தில் உள்ளனர். பேராபத்து நடந்தால் தாங்கள் தப்பித்து கொள்ளும் வகையில், கல்வித்துறையினரும் அவ்வப்போது ஏதாவது ஒரு கடிதத்தை மட்டும் எழுதி தயார்நிலையில் வைத்துகொள்கின்றனர்.ஆனால் மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாததை கல்வி துறையோ, மின்வாரியத்தினரோ கண்டுகொள்ளாமல் உள்ளது வேதனையான விஷயம்தான்.
இது தொடர்பாக அப்பகுதியினரின் புலம்பல்கள்: ஹசன்அலி(PFI,மாவட்ட செயற்குழு உறுப்பினர்): கடந்த பத்தாண்டுகளாக இதை அரசுக்கு தெரிவித்து மாணவர்களை காப்பாற்றுங்கள் என போராடிவருகிறோம். அரசு அதிகாரிகளோ செவிசாய்க்க மறுக்கின்றனர். திடீரென அறுந்துவிழுந்துவிட்டால் பேராபத்து என்பதால் அடிக்கடி இங்குள்ள மின்கம்பத்தை கண்காணித்து கொண்டே இருக்கிறோம்.அஸ்கர்(SDPI கிளை தலைவர்): அமைச்சர், கலெக்டர், மின்வாரிய அதிகாரி என அனைவரிடமும் புகார் கொடுத்தும் பயனில்லை. 1.15 லட்சம்ரூபாய் பணம் செலுத்தினால்தான் மாற்றுவோம் என பிடிவதாம் பிடிக்கின்றனர். பேராபத்து நடந்தபின் தமிழக அளவில் அதிகாரிகள் முகாமிட்டு கேள்வி மட்டும் கேட்பர். வருமுன்காப்போம் ரீதியில், விபத்து நடக்கும் முன் மின் வயர்களை மாற்ற மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.சீனிசெய்யது அலி(SDPI,நகர தலைவர்,பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகி): மனு கொடுத்தால் அவ்வப்போதுஅதிகாரிகள் வந்து பார்ப்பதோடு சரி .தீர்வு மட்டும் இல்லை. மனு கொடுத்து நாங்களே அலுத்துபோய்விட்டோம். சேகுஜலாலுதீன்(SDPI,இராமநாதபுரம் தொகுதி பொருளாளர்): மின்சார அபாயத்தை தொடர்ந்து கூறியதால், ஒருமுறை இடையில் ஒரு மின்கம்பத்தை மட்டும் இணைத்துவிட்டு, இனி விழாது என கூறி செல்கின்றனர். இதை பள்ளிக்கு வெளியே ரோடு வழியாக கொண்டு செல்ல வேண்டும்.

ரோட்டை காணவில்லை : கமிஷனரிடம் புகார்

ராமநாதபுரம் : "ராமநாதபுரம் நகராட்சி வசந்தநகரில் ரோட்டை காணவில்லை ,'என, நகராட்சி கமிஷனிரிடம் பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். நகராட்சி 12வது வார்டில் உள்ள வசந்தநகரில் அடிப்படை வசதிகள் என்பது கேள்வி குறியே.இந்த பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் ஐந்தாவது தெருவில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள 20 அடி ரோட்டை காணவில்லை என புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளனர். குண்டும் குழியுமாக ரோடு இருந்தாலும் பராவயில்லை ,ரோடே இல்லாமல் கழிவுநீர் தெப்பத்திற்குள் இறங்கி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.இது தொடர்பாக இப்பகுதியினரின் புலம்பல்: மணிமேகலை: இங்குள்ள 20 அடி ரோடு ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய்விட்டது. நகராட்சியில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நகராட்சி முழுவதும் புதிய ரோடு போடும்போது எங்கள் பகுதியில் உள்ள ரோட்டைகண்டு பிடிக்க கூட முயற்சிக்கவில்லை . ரோடு இல்லாமல் தனியார் பிளாட் வழியாக குளத்திற்குள் இறங்கி செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். விஜயா: கழிவுநீர் கால்வாய் இல்லாமல் ,வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ஏற்கனவே பெய்த மழைநீருடன் தெப்பமாக தேங்கி நிற்கிறது. இதில் இறங்கிதான் நடந்து செல்ல வேண்டிய அவலநிலையில் உள்ளோம். இங்குள்ள கவுன்சிலரிடம் கூறினால் அடுத்த முறை பார்ப்போம் என பொறுப்பின்றி கூறுகிறார். தினமும் நகராட்சி அலுவலகத்திற்கு ஒவ்வொரு வீட்டில் இருந்தும் இரண்டுபேர் வீதம் புகார் கொடுக்க சென்றும் தீர்வு இல்லை. சரவணன்: இப்பகுதியில் குப்பைகளையும் கொட்டி விடுவதால் தேங்கிய கழிவுநீர் குளத்திலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோயை பரப்புகிறது. ரோடு இல்லாத காரணத்தால் குடிநீர் லாரிகூட வருவதில்லை. பாலசுப்பிரமணியன்: வீட்டிற்கு 40 ரூபாய் வசூல் செய்து கழிவுநீரை அப்புறப்படுத்தினாலும் மீண்டும் தேங்கிவிடுகிறது. ஊரணிக்கு செல்லும் தண்ணீரையும் தனியார் சிலர் தடுத்துள்ளனர். இதையெல்லாம் நகராட்சி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. நகராட்சி கமிஷனர் முஜ்புர்ரஹ்மான் கூறும்போது, ""இது குறித்த தகவல் எனக்கு வர வில்லை. அந்தபகுதியில் ஆய்வு மேற்கொண்டு ரோட்டின் ஆக்கிரமிப்புகள் அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்,'' என்றார்.

குற்றங்களை தடுத்திட

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றங்களை தடுத்திட போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசார நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.குற்றங்களை தடுத்திட வருமுன் காப்போம் என்ற ரீதியில், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, ராமநாதபுரம் எஸ்.பி.,பிரதீப்குமார் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது .இதில் பொது மக்கள் தங்களை காத்துகொள்வது எப்படி என பட்டியலிட்டுள்ளனர்.அதன் விபரம் :செயின் பறிப்பு சம்பவங்களை தவிர்க்க, கழுத்தில் அதிக நகைகளை அணிந்து கொண்டு கூட்ட நெரிசலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.பயணம் செய்யும் போதும் நகையை தவிர்க்க வேண்டும், வித்தியாசமான நபர்கள் அருகில் வந்தால் கவனமாக இருக்க வேண்டும், சந்தேக நபர்கள் தெருவில் சுற்றிதிரிந்தால் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் தரவேண்டும்.தெருவில் பேன்ட் பிட், கம்பளம், மெத்தை விற்பவர்கள் வந்தால் எங்கிருந்து வருகிறார்கள் என விசாரிக்க வேண்டும், பெண்கள் காலையில் கோலமிடும்போது, வாக்கிங் செல்லும் போது தனித்து இல்லாமல் துணையுடன் செல்ல வேண்டும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் பின்வாசலை கண்டிப்பாக மூட வேண்டும் .இரு சக்கர வாகன திருட்டை தவிர்க்க வாகனத்தை நிறுத்தும்போது சைடு லாக் போட வேண்டும், சாவியை மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும், தெருக்களில் நிறுத்தும் வாகனங்களை செயின் கொண்டு பூட்ட வேண்டும்.பிக்பாக்கெட் திருட்டை தவிர்க்க பஸ்சில் பயணம் செய்யும் போது, பர்சை பெண்கள் கட்டை பையில் போட்டு எடுத்து செல்லக்கூடாது, ஆண்கள் பேன்டின் பின்பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும், கூட்டநெரிசலில் பர்ஸ் தெரியும்படி வைத்து கொள்ளாமல் ஆடையில் மறைத்து வைத்துகொள்ள வேண்டும்.வீடுகளில் திருட்டை தவிர்த்திட அடையாளம் தெரியாத புதிய நபர்கள் வீட்டிற்குள் அனுமதிக்காதீர்,அண்டை வீட்டாரும் நட்புடன் பழக வேண்டும், வீட்டு கதவில் கண்ணால் பார்க்க கூடிய துவாரம் அமைத்து கொள்ள வேண்டும்,வீட்டு டிரைவர், வேலை செய்பவர்களின் குடும்ப விபரம் போட்டோவை வைத்து கொள்ள வேண்டும், நகைகளை லாக்கரில் வைக்க வேண்டும், வங்கிக்கு அதிகளவில் பணம் எடுக்க செல்லும் போது தனியாக செல்லகூடாது, பொது இடங்களில் புதிதாக பழகிய நபரை வீட்டிற்கு அழைத்து செல்லகூடாது.கவனத்தை திசைதிருப்பும்நபர்களிடம் இருந்து காத்து கொள்ள, எச்சில் உமிழ்ந்து துடைப்பது போல், பணத்தை கீழே போட்டு எடுக்க வைத்து ஏமாற்றவது, தங்க நகைகள் சுத்தம் செய்பவர்கள் போல், ஜோதிடர்கள் போல் வருபர்களை அனுமதிக்ககூடாது. இதுபோன்ற பல அறிவுரை களுடன் வீடுகள்தோறும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

மாணவி தற்கொலை..

ராமநாதபுரம் : கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதில், மர்மம் இருப்பதாக கூறி, ராமநாதபுரம் மருத்துவமனையில் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால், பதட்டம் உருவானது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பரமக்குடி பாம்பூரை சேர்ந்தவர் சுபர்ணா(18). கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாண்டு படித்து வந்த இவர், நேற்று முன்தினம் கல்லூரி விடுதியில் தூக்குபோட்டு, தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம்இருப்பதாகவும், இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வழக்கை திசை திருப்ப பார்த்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் உறவினர்கள் திரண்டனர். இதனால் மருத்துவமனை பகுதியில் பதட்டமான நிலை உருவாக, கண்ணீர் புகை குண்டுகளுடன் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டனர் . கல்லூரி சார்பில் யாரும் வராததால் தாசில்தார் ரவீந்திரன், நாகராஜன் ஏ.டி.எஸ்.பி., ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வரவில்லை. பின் மாணவி உடலை மாலை நான்கு மணிக்குமேல் உறவினர்கள் வாங்கி சென்றனர். கல்லூரிகளுக்கு விடுமுறை: நேற்று காலை மாணவ,மாணவிகளை ஏற்றி வந்த கீழக்கரை சதக் இன்ஜினியரிங் கல்லூரி பஸ்களை ஆர்.எஸ்.மடை அருகே சிலர் வழி மறித்தனர். போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின் பஸ்களில் வந்த மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு அதே பஸ்சில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். முகம்மது சதக் அறக்கட்டளை கீழ் இயங்கும் சதக் பாலிடெக்னிக் கல்லூரி, சதக் இன்ஜினியரிங் கல்லூரி, செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நேற்று திறக்கப்படவில்லை. இறந்த மாணவிக்கு அனுதாபம் தெரிவித்து விடுமுறை அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கல்லூரி முன் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

Wednesday, 2 February 2011

பிராணி மித்ரன்......

இராமநாதபுரத்தில் இராமநாதபுரம் நகராட்சி மற்றும் பிராணி மித்ரன்(விலங்குகள் நலன் மற்றும் பாதுகாப்பு அமைப்பு) சார்பாக 02/02/2011 இராமநாதபுரம் நகர்ப் பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பு ஊசிகள் போடும் முகாம் நடைபெற்றது.நகர வீதிகளில் சுற்றித்திரிந்த அனைத்து நாய்களுக்கும் வீதிவீதியாக சென்று வெறிநோய் தடுப்பு ஊசி போடப்பட்டது.

அனைவருக்கும் கல்வி இயக்கம்


இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரையில் 01/02/2011 அன்று அனைவருக்கும் கல்வியை வலியுறுத்தி கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் மற்றும் கலை பயணம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக கல்வியின் முக்கியத்துவம் பற்றி நாடகமும் தெருமுனை கூட்டமும் நடந்தது. கருத்தாற்றல்மிக்க நாடகத்தை மக்கள் பெருந்திரளாக கண்டு பயன்பெற்றனர்.

 
Free Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Website templateswww.seodesign.usFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver